Published on 2015-04-08 @ 09:44:00 PM

யாழ்ப்பாணத்தில் சுத்தமான குடிதண்ணீரை உறுதிப்படுத்தக் கோரியும், அடுத்த 78 மணித்தியாலயங்களுக்குள் தமக்கு தீர்வு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ். நல்லூர் ஆலய பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம், வடக்கு ஆளுநர் பளிகக்காரவின் உறுதிமொழியைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. 

இந்த நிலையில் செவ்வாய் இரவு முதலமைச்சர் அடங்கிய வடக்கு மாகாண உறுப்பினர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது எதிர்வரும் 12 ஆம் திகதிவரை பொறுத்திருக்குமாறும், அதன்பின்னர் தாம் பதில் தருவர் எனவும் வடக்குமாகாண முதலமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார். அதுவரை பொறுத்திருக்கமுடியாது என்று குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், சுன்னாகம் பகுதிகளில் ஒயில் கலந்த தண்ணீரில் பாதிப்பு இல்லை என்றால் அதைப் பருகலாமா, இல்லையா? என்று எழுத்து மூலம் தமக்கு பதில் தரவேண்டும் என்றும் கோரினர். 

அதற்கும் 12ஆம் திகதிவரை அவகாசம் கேட்ட முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம், "அதுவரை நாம் எந்தத் தண்ணீரைக் பருகுவது?" என்று கேட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் குழு அங்கிருந்து விலகிச்சென்றது. மீண்டும் இன்று புதன்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் போராட்டத்தை கைவிடக் கோரி, தனது முடிவை எழுத்துமூலம் இன்று பிற்பகல் 2 மணியளவில் அறிவித்தார். 

முதலமைச்சரினால் அனுப்பபட்ட கடிதத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பில் ஆறு மேலதிக நிபுணர்களின் பெயர்களைத் தருமாறும், அவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஒன்பது நிபுணர்களுடன் சேர்ந்து புதிய மீள் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழுவாக செயற்படுவார்கள் என்றும் - தற்போது இருக்கும் தரவுகளின் அடிப்படையில் சில கிணறுகளில் எண்ணெய், கிறீஸ் ஆகியன இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. வேறு சிலவற்றில் அவ்வாறு காணப்படவில்லை. இதன் காரணத்தினாலேயே பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் நீரை உட்கொள்வது உசிதமில்லை என்று கருதுகின்றோம். உரிய தீர்வு காணப்படும் வரையில் எம்மால் குடிதண்ணீர் விநியோகம் தொடர்ந்தும் முன்வைக்கப்படும். தர உறுதிப்பாடு, சீரான குடிதண்ணீர் வழங்கல் தொடர்பில் உரிய அதிகாரிகளின் மேற்பார்வை உறுதிப்படுத்தப்படும். நைத்திரேற்று நீரில் கலந்திருப்பதையும் சில கிணறுகளில் எண்ணெய், கிறீஸ் கலந்திருப்பபதையும் அகற்ற நாம் மத்திய அரசையும், சர்வதேச நிறுவனங்களான உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் உதவியையும் நாட வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும். இதுபற்றி கௌரவ ஆளுநருக்கும் தெரியப்படுத்தப்படும். எனினும் செய்யப்பட்டுவரும் ஆய்வின் இறுதி அறிக்கை புதிய மீள் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழு கூடிய விரைவில் எமக்குச் சமர்ப்பிக்க வேண்டும். முன்னர் தயாரிக்கப்பட்ட முதல்கட்ட அறிக்கையும் இறுதி அறிக்கையும் மத்திய அரசாங்கத்திற்கும், உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றுக்கும் அடிப்படை ஆவணங்களாக அவர்களின் மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுசரனையாக அனுப்பப்படும். - என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

முதலமைச்சரால் அனுப்பபட்ட இந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும், தமது கோரிக்கைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள் அந்தக் கடிதத்தை ஏற்காது திருப்பியனுப்பிவிட்டனர். இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார். ஆளுநருடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். இதன்போது 6 நாள்களில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வைத் தான் பெற்றுத்தருவார் என்று ஆளுநர் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. - 

© Copyright 2014 malarum.com

Send us news ites that are relevant to this section