Published on 2015-04-10 @ 09:44:00 PM

http://www.tamilwin.com/show-RUmtyETdSUku2E.html


குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ, அழுத்தங்களோ எமக்கில்லை: விக்கினேஸ்வரன் [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 01:25.54 PM GMT ] குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ அழுத்தங்களோ எமக்கில்லை என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்த விவகாரம் அண்மைய காலங்களில் பெரும் சிக்கலுக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குடிநீர்ப் பிரச்சினையில் அரசியலை புகுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் அவர் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வை பெறமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன் இது தொடர்பில் வடமாகாண சபை அசமந்தப் போக்கில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைந்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

அவர்களுடைய நடவடிக்கைகள் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதை நோக்கிச் செல்லாது பிரச்சினைக்கான குற்றச்சாட்டினை எம் மீது முன் வைப்பதனை மையமாகக் கொண்டு நகர்ந்து செல்கின்றது.

இவ்வாறான செய்கைகள் குடிநீர்ப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைப் பெற்றுத் தரப் பயன்படப் போவதில்லை என்பதுடன் பொதுமக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகின்ற ஒரு முயற்சியாகவே அமைந்துள்ளன.

குடாநாட்டின் நிலத்தடி நீர்ப்பரப்பில் எண்ணெய் போன்ற மாசுக்கள் கலந்திருக்கின்றது என்ற செய்தி புதியதல்ல. 2008 ஆம் ஆண்டிலேயே யாழ் மாவட்டத்தின் அப்போதைய அரசாங்க அதிபர் இது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு இது பற்றித் தெரியப்படுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் குடாநாட்டின் சில பிரதேசங்களில் எண்ணைக் கசிவு உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

ஆயினும் இது தொடர்பில் பூரணமான ஆய்வுகள் செய்யப்பட்டு முழுமையான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு உண்மையானதும், பூரணமானதும், நிரந்தரமானதுமான ஓர் தீர்வினைக் காணும் பொருட்டு நீண்டகால மற்றும் உடனடித் தீர்வு நோக்கி வடமாகாண சபையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதில் முதலாவதாக, 9 பேர் கொண்ட தூயநீருக்கான விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது.வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட இச்செயலணியில் வடமாகாண, மற்றும் வேற்று மாகாண நிபுணர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து பூரண அறிக்கை ஒன்றினை ஏப்ரல் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

ஓர் தற்காலிகத் தீர்வாக பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகம் ஒன்றினை மாகாணசபை உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு ஊடாக ஆரம்பித்து அதனைத் திறம்பட செயற்படுத்தி வருகின்றது.

இதனது இன்னொரு நடவடிக்கையாக நீரில் கலந்திருக்கக் கூடிய எண்ணெயின் அளவுகளை மிக விரைவாக கண்டறியக் கூடிய இயந்திரம் ஒன்றின் தேவையினைக் கருத்தில் கொண்டு நிபுணர் குழுவின் சிபார்சிற்கமைய புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் பொருத்தமான இயந்திரம் ஒன்றினை பெற்றுக் கொடுக்கவும் வடமாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் பயனாக நிபுணர் குழுவிடம் இருந்து இடைக்கால அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆயினும் இது ஓர் இடைக்கால அறிக்கை மாத்திரமே.

இறுதி அறிக்கை வரும் வரை காத்திருப்பதே பொருத்தமான செயலாகும். அதனை இம்மாத இறுதியில் பெற்றுக் கொள்ளலாம் என நம்பப்படுகிறது. அதுவரை குறித்த கிணறுகளில் இருந்து நீரைக் குடிக்காதிருப்பதே உசிதம்.

இந்நிலையில் தூயநீருக்கான விசேட செயலணிக்கு என்னைத் தலைமை தாங்கும் படியும் அதன் செயற்பாடுகளில் நேரடியாக தொடர்புபடும் படியும் சிலர் வலியுறுத்தி வந்தனர்.சிறப்பான நிர்வாகம் என்பது பொருத்தமான அதிகார பகிர்ந்தளிப்பின் மூலமே சாத்தியப்படும். இந்த வகையில் இத்துறையுடன் தொடர்புடைய இரண்டு அமைச்சர்களுக்கு இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை இடுவதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக துறைசார் வல்லுனர்களைக் கொண்ட குழுவொன்று இது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்ற வேளையில் இவ் விடயம் பற்றி ஊடகங்களுக்குத் தொடர்ச்சியாகக் கருத்துக்களை தெரியப்படுத்துவதன் மூலம் பிரபலம் தேட வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லையாதலால் பொருத்தமான அதிகாரப் பகிர்ந்தளிப்பைச் செய்து இறுதி அறிக்கை வரும் வரை காத்திருக்க முடிவு செய்திருந்தேன்.

நேற்றைய தினம் கௌரவ ஆளுநர் அவர்கள் தம்முடன் இணைந்து இது சம்பந்தமாகச் செயல்படும்படி கேட்ட போது கட்டாயமாக நாங்கள் எங்கள் ஒத்துழைப்பை எங்கள் மக்கள் நலன் கருதி வழங்குவோம். என்று கூறினேன். எனினும் சிலரின் நடவடிக்கைகளை ஆழ்ந்து ஆராய வேண்டியுள்ளது.

தேர்தல் காலங்களில் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்து அதன் மூலம் மக்களிடம் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முனைவதும் தேர்தலுக்காகத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதும் வழக்கமான ஒன்றேயாகும்.

அந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை நோக்காகக் கொண்டு சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் நேரடியாகவும் சில அமைப்புக்களைப் பயன்படுத்தி மறைமுகமாகவும் குடாநாட்டு குடிநீர்ப் பிரச்சினையைக் கையில் எடுத்து கொண்டதுடன் மக்களைத் தேவைக்கதிகமாகப் பதட்டமடைய வைத்து வருகின்றார்கள் என்று கருத முடிகின்றது.

அவ்வாறானவர்கள் தயவு செய்து மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை அரசியலாக்கி மக்களைப் பதட்டமடையச் செய்யாதீர்கள் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

குடிநீர்ப் பிரச்சினை பற்றி பிரஸ்தாபிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே ஊகங்களின் அடிப்படையில் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி கருத்துக்களை வெளியிடுவதிலும் அதன்மூலம் மக்களை பதட்டமடையச் செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்களே தவிர யாழ் குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினையை எவ்வாறு அணுகலாம்? அதற்கான நிரந்தர தீர்வினைக் காண்பதற்கு என்ன செய்யலாம்? என்பது பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதனையும் இதுவரை முன்வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பிரச்சினையை பெரிதுபடுத்துவது இலகு. ஆனால் அதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. இப் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டுள்ள சூழலியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் பொதுமக்கள் மற்றும் அமைப்புக்கள் இப்பிரச்சினை தொடர்பில் தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன் வைப்பதே பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என நான் கருதுகின்றேன்.

இதனால் தான் கௌரவ ஆளுநருடன் சேர்ந்து வருகின்ற ஞாயிறு காலை 9.30 மணிக்கு சகலரையும் கூப்பிட்டு ஒரு கூட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளேன்.

நிறைவாக குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினையில் அக்கறை கொண்ட தரப்பினர் இது குறித்து வெறுமனே பத்திரிகை அறிக்கைகளையும் எதிர்மறையான கருத்துக்களையுங் கேட்டு விட்டு கவனயீர்ப்பு போராட்டங்களை மாத்திரம் மேற்கொள்ளாது இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான பங்களிப்புக்களை வழங்கும் பொருட்டு வடமாகாணசபையுடனும் கௌரவ ஆளுநருடனும் இணைந்து செயலாற்ற முன்வருதல் அவசியம்.

அதுவே இன்றைய தேவையுங்கூட.குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ அழுத்தங்களோ எமக்கில்லை.மாறாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவ் வடமாகாணசபை உறுப்பினர்கள் பொதுமக்களின் பிரச்சினைக்கு உண்மையானதும் நிரந்தர தீர்வினைக் காணும் நோக்கத்துடனும் இதுவரை பல்வேறுபட்ட நடவடிக்கைளை எடுத்து வந்துள்ளது.

எதிர்காலத்திலும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முயன்று வரும். அதுவரை பொறுமை காத்து குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வினை நோக்கி முன்நகர வடமாகாண சபையுடன் கைகோர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.

தீர்வு கிடைக்கும் வரையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் தூயநீர் தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Send us news ites that are relevant to this section