Published on 2015-04-08 @ 06:50:00 AM

http://www.deepamnews.com/details.php?nid=3&catid=25445&hit

கழிவுஎண்ணெய் பிரச்சனையே இல்லை: வீண் செலவு செய்து குடிநீர் கொடுக்கிறோம்- ஒரேபோடாக போட்டு முடித்தார் ஐங்கரநேசன்

பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை,07-04-2015 07:17 PM

யாழ்ப்பாணத்தில் நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்படவில்லை. நீரில் மாசு கலந்துள்ளதாக சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்வதால் மக்கள் பயத்தில் வீட்டுக் கிணறுகளில் தண்ணீர் குடிக்காமல் விடுகிறார்கள். இவர்களிற்கெல்லாம் பெரும் பொருட் செலவில் நாங்கள் தண்ணீர் கொடுக்க வேண்டியிருக்கிறதென வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பெரும் குண்டையே வெடிக்க வைத்துள்ளார். தூயநீர் வேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் நல்லூரில் இன்று தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், ஐங்கரநேசன் இப்படி பொறுப்பற்ற விதத்தில் பேசியுள்ளார்.

வடமாகாணசபை அமர்வு இன்று ஆரம்பித்தபோது, நீர்ப்பிரச்சனை முக்கிய விவாதப்பொருளானது. நிலத்தடி நீர் மாசு தொடர்பில் அமைச்சர்கள் ஐங்கரநேசனும், சத்தியலிங்கமும் கூட்டாக அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் சுன்னாகம் கழ்வு எண்ணெய் பிரச்சனை என்ற ஒன்றே இல்லையென்ற சாரப்பட கருத்துக்கள் இருந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒன்பது சர்வதேச வல்லுனர்களின் ஆய்வு முடிவுகள் நிலத்தடி நீரில் மாசில்லையென கூறுகிறது. எனினும், மக்களை குழப்பும் விதத்தில் சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இப்படியான குழப்பவாதிகளினாலேயே மக்கள் தமது வீட்டு கிணற்றுநீரை குடிக்க அச்சப்படுகிறார்கள்.

வடமாகாணசபையின் தூயநீருக்கான செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த செயலணியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முடிவை நிபுணர் குழு அறிவித்தது. தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பகுதிகளில் நீர்மாசுபட்டதாக கூறப்பட்ட கிணறுகளை சோதனையிட்டபோது, அப்படியொன்று நடக்கவில்லையென்பது தெரிய வந்துள்ளது என்றார்.

இந்த சமயத்தில் குறுக்கிட்ட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், தனியார் நிறுவனமொன்று தன்னிச்சையாகவே ஆய்வுகழள செய்ததாக குற்றம்சாட்டினார். தூயநீரக்கான செயலணி ஒன்று உள்ளபோது, அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னச்சையாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு தன்னிடம் போதிய ஆதாரமுள்ளது என்றும், உள்நோக்கங்களின் அடிப்படையில் இப்படி பொய்யான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது, அந்த விடயத்தில் மாகாணசபை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதனையடுத்து உரையாற்றிய வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், மாகாண சபைக்கு அறிவிக்காமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்றுக் கொண்டார்.

Send us news ites that are relevant to this section