Published on 2015-06-25 @ 09:21:00 PM

அண்மையில் நிகழ்ந்த சிந்தனைக்கூட உரையாடல் பற்றிய ஒரு குறிப்பு - இ.கிருஸ்ணகுமார்:-


'யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர் வளத்தை பேணிப் பாதுகாப்போம் எனும் தலைப்பில் தொடர் உரையாடல் நிகழ்வில் பொறியியலாளர் எம்.சூரியசேகரம் 'கடல் நீரில் இருந்து குடிநீரைப் பெறுதல் எமக்;கு பொருத்தமானதா' என்ற பொருளில் உரையாடல் ஒன்றை 21.06.2015இல் நிகழ்த்தினார். பேராசிரியர் இரா.சிவசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பயனுள்ள உரையாடலுடன் கூடிய கருத்து பரிமாற்றங்களும் நடைபெற்றன.


நீர் எமது வாழ்வின் அங்கம். சுத்தமான நீரை பெறுதல் எமது வாழ்வுரிமை. நீர் ஒரு விற்பனைப் பண்டமல்ல. இலங்கை நீர் வளத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. எமது நாட்டு மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான அளவு நீர் வளம் கொண்ட நாடு. போதுமான மழை வீழ்ச்சியுடன் ஆறுகளும், குளங்களும், நீர்த்தேக்கங்களும், நீரோடைகளும் நிறைந்த நாடு. இதை விட போதுமான நிலத்தடி நீர்வளம் கொண்ட நாடு. மேலதிகமான பெருமளவிலான நீர் வருடந்தோறும் வீணே கடலில் விழுகின்றது. 'சொர்க்கத்தில் இருந்து விழும் ஒவ்வொரு துளிநீரும் மக்களுக்கு பயன்படாமல் வீணே கடலில் விழ அனுமதிக்கக் கூடாது' என இலங்கை மன்னன் பராக்கிரமபாகு பிரகடனப்படுத்தியதை நாம் அனைவரும் நினைவு கூறல் அவசியம். நீரை மாசடையாமல் பயன்படுத்தினால் நீர் நெருக்கடி வர இடமேயில்லை. எம்மிடம் நன்னீர் வளம் மட்டுமல்ல அதைக் கையாளக்கூடிய மனித வலுவும் அறிவு வலுவும் உண்டு. எமது நாட்டின் பண்டைய நீர்;ப்பாசன நாகரிகம் உலகப்புகழ் வாய்ந்தது.


ஒரு நாட்டின் நீர் வளம் தேசியச் சொத்து. முழு மக்களாலும் பகிரப்பட வேண்டியது. இது ஒரு பிரதேசத் சொத்து அல்ல. 'கிளிநொச்சி நீர் கிளிநொச்சிக்கே' என்ற சுலோகம் பொய்யானதும் பிழையானதுமாகும். குறுகிய அரசியல் நோக்குடையது. இரணைமடுக் குளத்துக்கு வரும் பெருமளவிலான நீர் வவுனியா பிரதேசத்திலிருந்தே வருகிறது. குறுகிய பிரதேச அரசியலுக்கு இப்போது பலியாயிருப்பது இரணைமடுக்குளநீரே. இதன் விளைவே கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எம்மைத் தள்ளியுள்ளது.


ஏற்கனவே யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலத்தடி நீரை எண்ணைக் கழிவுகளால் மோசமாக மாசயடைச் செய்து நீர் வளத்தை அழித்த பின்பு அதுபற்றி முறையான தீர்வுகளை நோக்கிச் செல்லாது மேலும் சூழலை மாசுபடுத்தும் முறையில் கடலிருந்து உப்பு நீக்கி குடிநீர் பெறும் திட்டத்திற்கு வந்திருக்கிறோம். நாம் குடிக்கும் நீரை மேலும் மேலும் விலை கூடிய ஒரு விற்பனைப் பண்டமாக்கி மேற்கு நாடுகளின் தொழில் நுட்;பத்தில் தங்கி நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். தற்போது அமெரிக்க கம்பனி ஒன்று கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.


இரணைமடுவிலிருந்து நீர் கொண்டு வரும் திட்டத்தில் கிடைக்கும் நீருக்கான விலையைவிட ஐந்து மடங்கு அதிகரித்த விலையில் கடல் நீரை நன்னீராக்கி விற்கப்போகிறது இந்நிறுவனம். பாரிய இயந்திரத் தொகுதி, தொடர்ச்சியான பராமரிப்பு, தொழில்நுட்பத்தில் மேற்குலகில் தங்கியிருக்கும் நிலை என தொடர்ந்து கொண்டு போகும் இத்திட்டம் உண்மையிலேயே தேவையானதா? எஸ்கிமோவருக்கு குளிர்சாதனப்பெட்டி விற்பனை செய்வதை போன்றதே இச்செயல். கடல் நீரிலிருந்து குடிநீரைப் பெறும் திட்டம் ஏன் எமக்குப் பாதகமானது?


1. மிக உயர்ந்த செலவு (ஐந்து மடங்கு அதிகம்)


2. அதிக அளவு சக்தி தேவை. ஏற்கனவே பெற்றோலிய பொருட்களின் மாசுகளால் அவதியுறும் எமக்கு மேலும் சூழல் மாசடைய வழிவகுக்கும்.


3. நீடித்து நிலைக்கக்கூடிய நீண்டகால செயற்பாட்டிற்கு உதவாது.


4. சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவகையில் மின்சார உற்பத்தி, நீர் விநியோகம், அபிவிருத்தி, திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும். உப்பு நீரில் குடிநீர் திட்டம் எமக்கு பொருத்தமானதல்ல.


5. இயற்கை நமக்கு அளித்துள்ள மழைநீர் வளம், ஆறுகள், குளங்கள், நிலத்தடி நீர் வளம் ஆகிய எல்லாவற்றையும் முறையாகத் திட்டமிட்டு பராமரித்தால் போதிய அளவு குடிநீர் பெறமுடியும்.


6. கடல் நீரை சுத்திகரித்து பெறும் நீர் மிகத் தூய்மையானது என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. உண்மையில் தூயநீர் குடிநீராகாது. மீண்டும் கணியுப்புக்கள் சோக்கப்பட வேண்டும்.

நீர்வளமற்ற சவுதிஅரேபியா போன்ற பாலைவனப் பிரதேசங்களுக்கே இத்திட்டம் பொருத்தமானது. அங்கு நீரை விட பெற்றோல் விலைகுறைவு. நிதிவளம் கூடிய பாலைவன நாடுகளுக்காக அமெரிக்கா உருவாக்கிய அதிக செலவினைக் கொண்ட திட்டம் இது. அங்கு அமெரிக்காவே சகலவற்றையும் கட்டுப்படுத்துகின்றது. இலாபத்தை கொள்ளையிடுகின்றது.


பொறியியலாளர் சூரியசேகரத்தின் உரையைத் தொடாந்து கடல் நீரிலிருந்து குடிநீர்த்திட்டத்திற்கு எதிர்பாகவும், ஆதரவாகவும் கலந்துரையாடல் நடைபெற்றன.


திரு.குறூஸ் அவர்கள் முதலில் இரணைமடு குடிநீர் திட்டத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவித்து அதுவே யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் பிரச்சனையை தீர்க்க வல்லது என்று கூறி, முடிவில் கிளிநொச்சி விவசாயிகள் அதை எதிர்ப்பதால் அதை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. எனவே தான் கடல் நீரிலிருந்து குடிநீர் திட்டத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று என்றார். பின்பு கடல் நீரிலிருந்து குடிநீர் திட்டம் சிறந்தது எனவும் மாசுக்கள் மிகக்குறைவு என்றும் தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்தது என்றார். சூழல் மாசு, செலவு அதிகம், நீடித்த நிலைத்த பயன்பாடுகள் பற்றிய கருத்துக்களை பாரதூரமாக எடுக்கவில்லை.


ஆனால் வடமராட்சி மீனவர் சங்க இளைஞர் ஒருவர் கடல் நீரிலிருந்து குடிநீர் திட்டத்திற்கு வடமராட்சி மீனவர்களின் சம்மதம் இலகுவில் கிடைக்காது என்றார். விவாதங்கள் சூடாகவும் காரசாரமாகவும் நடைபெற்றன.


எனக்குள் எழுந்த கேள்வி இதுதான். எமது பகுதியில் உள்ள சூழல் மாசடையா வண்ணம் பெறக்கூடிய இரணைமடுத்திட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலையில் வடமாகாண சபையும் வடமாகாண மக்களும் இருப்பார்களேயானால் நாம் இதுவரை பேசிய தழிழ் தேசியம் என்பது வெறும் போலி வார்த்தைகள் தானா? நாம் ஆளுவதற்கா? ஆளப்படுவதற்கா? தகுதியானவர்கள். சிறிதளவு அதிகாரமே மக்கள் நலன் சாராத செயற்பாடுகளை தடுகுமானால் முழு அதிகாரமும் முழு மக்களுக்கும் எதிராகவும் சுற்றுக்சூழலை அழிக்கவும் பயன்படும். இதற்குத்தானா மாகாண சபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தோம் என்பதே.


இ.கிருஷ;ணகுமார்
செயலாளர்
சிந்தனைகூடம்
(கருத்தரங்குப்பிரிவு.)

Send us news ites that are relevant to this section